வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள் 30 பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது அம்பலம்


வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள் 30 பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது அம்பலம்
x
தினத்தந்தி 6 Jun 2021 4:23 PM GMT (Updated: 6 Jun 2021 4:23 PM GMT)

வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதானவர்கள், 30 பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு ராமமூர்த்திநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காளதேச நாட்டை சேர்ந்த இளம்பெண் 4 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மதுபாட்டிலால், அந்த நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு தம்பதி உள்பட 12 பேர் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து விபசார தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண்ணும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்ததும், பணப்பிரச்சினையில் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருந்ததும் தெரிந்தது. இந்த நிலையில், கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது வங்காளதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்து கைதான நபர்கள் விபசார தொழில் நடத்தி வந்துள்ளனர். பெங்களூருவில் தங்குவதற்காக போலி ஆதார் அடையாள அட்டையை வாங்கி உள்ளனர். பெங்களூரு மட்டுமின்றி கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் விபசார தொழில் நடத்தி வந்துள்ளனர்.

இதற்காக வங்காளதேசத்தில் இருந்து இளம்பெண்களை சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்திற்கு வரவழைத்து அங்கிருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

அந்த இளம்பெண்களிடம், பெங்களூருவில் மதுபான விடுதியில் நடன அழகி உள்ளிட்ட வேலை வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து வந்து, அவர்களை விபசாரத்தில் தள்ளி 12 பேரும் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. தினமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. சில இளம்பெண்கள், அவர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடாமல் தனியாக சென்று விபசாரம் செய்ததால் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story