காரில் கடத்தி வந்த 384 மதுபாக்கெட்டுக்கள் பறிமுதல்
உடுமலையில் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வந்த 384 மதுபாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை
உடுமலையில் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வந்த 384 மதுபாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வருவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக போலீசார் பல்வேறு பகுதிகளில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருகிறவர்களை நிறுத்தி விசாரித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாகன சோதனை
அதன்படி உடுமலையில் நேற்று அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஆனந்தகிருஷ்ணன், தேவராஜ், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் பொன்ராஜ், சம்பத் உள்ளிட்டோர் உடுமலை-தளிசாலையில் வடக்குகுட்டை வீதி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருகாரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரின் இருக்கையில் மதுபாக்கெட் அட்டை பெட்டிகள் இருந்தது. அத்துடன் டிக்கியிலும் மதுபாக்கெட் அட்டை பெட்டிகள் இருந்தது. மொத்தம் 8 பெட்டிகள் இருந்தது.
கைது
அதில் குளிர்பானம் பாக்கெட்டுகள் போன்று மொத்தம் 384 மது பாக்கெட்டுகள் இருந்தன. இந்த மது பாக்கெட்டுகள் கார்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது ஆகும். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாக்கெட்டுகளை காரில் கடத்தியதாக உடுமலை சாதிக் நகரை சேர்ந்த மன்சூர் இலாகி (வயது 29) என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மன்சூர் இலாகி, கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். காரில் இருந்த மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story