திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிறுவன் யாகம் செய்வது போல் பரவும் வீடியோ


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிறுவன் யாகம் செய்வது போல் பரவும் வீடியோ
x
தினத்தந்தி 6 Jun 2021 10:35 PM IST (Updated: 6 Jun 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரத்தில் சிறுவன் யாகம் செய்வது போல் பரவும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

சிறுவன் யாகம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. மேலும் பல்வேறு ஆசிரமங்களும் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கிரிவலம் செல்வார்கள். கிரிவலப்பாதையில் தற்போது நூற்றுக்கணக்கான சாமியார்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் அருகில் மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சாமியார் போன்று சித்தரித்து கொண்டு பக்தர்களிடம் பேசி வருவதாகவும், இரவு நேரங்களில் சிறுவனை வைத்து அவர் யாகம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வீடியோவும் இணையதளங்களில் பரவி வருகிறது. 

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேற்றும் முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம்  விசாரணை நடத்தி, அந்த இடத்தில் யாகம் போன்றவை நடத்த கூடாது என்று கூறி உடனே இடத்தை காலி செய்ய உத்தரவிட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும் வீடியோ பதிவில் வந்த சிறுவன் யார், அந்தப் பெண்ணின் மகனா? என குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடையாள அட்டை வழங்க வேண்டும்

அதுமட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இங்கு வந்து தங்குவதாகவும் அடிக்கடி புகார்கள் வருகிறது. 

கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களை வரன்முறை படுத்த அவர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க மாவட்ட காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை பாதியில் கைவிடப்பட்டது. 
எனவே கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களை வரன்முறைப்படுத்த மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story