ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன்கடைகளில் கொரோனா அச்சமின்றி மக்கள் சமூக இடைவெளியின்றி நெருங்கி நின்று பொருட்கள் வாங்கும் நிலை நிலவுகிறது


ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன்கடைகளில் கொரோனா அச்சமின்றி மக்கள் சமூக இடைவெளியின்றி நெருங்கி நின்று பொருட்கள் வாங்கும் நிலை நிலவுகிறது
x
தினத்தந்தி 6 Jun 2021 10:56 PM IST (Updated: 6 Jun 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியின்றி பொருட்கள் வாங்கும் மக்கள்

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன்கடைகளில் கொரோனா அச்சமின்றி மக்கள் சமூக இடைவெளியின்றி நெருங்கி நின்று பொருட்கள் வாங்கும் நிலை நிலவுகிறது.
ரேஷன் கடைகள்
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா 2-வது பரவலை தடுக்க அரசு தளர்வின்றியும், தளர்வுகளோடும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்தபோதிலும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கைகழுவுதல், தேவையின்றி வெளியில் வராமல் வீட்டிலேயே இருத்தல் போன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்து வருகின்றனர். இருந்தபோதிலும் சிலர் கொரோனா அச்சமின்றியே இருந்து வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள 2 ரேஷன்கடைகளில்  மாதாந்திர அத்தியாவசிய பொருட்களை வாங்க அந்த கடைகளுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்தனர்.
கொரோனா பரவல்
இவர்கள் முககவசம் மட்டும் அணிந்தபடி நீண்டவரிசையில் நெருக்கமாக சமூக இடைவெளியின்றி நின்று பொருட்களை வாங்க காத்திருந்தனர். ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது இதுபோன்று சமூக இடைவெளியின்றி நின்றது காண்பவரை கவலை அடைய செய்தது. இதுபோன்ற செயலால் அந்த வரிசையில் நின்றவர்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த நீண்டவரிசையை சரிசெய்து சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க ரேஷன்கடைக்காரர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கருத்தில்கொண்டு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் கடைகளில் போலீசாரை நியமித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story