ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி


ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2021 5:32 PM GMT (Updated: 6 Jun 2021 5:32 PM GMT)

ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ராயக்கோட்டை:
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள வரகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுக்கு முரளி (வயது 17) என்ற மகனும், அஸ்வினி (15) என்ற மகளும் இருந்தனர். முரளி ஓசூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அஸ்வினி பிளஸ்-1 படித்து வருகிறார். ஜெயபால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் புஷ்பா, முரளி, அஸ்வினியுடன் வரகானப்பள்ளியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முரளி தங்களது ரோஜா தோட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றார். வேலையை முடித்து விட்டு விளையாட சென்றபோது, பிரதீப் என்பவர் நிலத்தை உழுதுவிட்டு டிராக்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பிரதீப், முரளியை டிராக்டரில் ஏறும்படி கூறினார்.
பலி
இதையடுத்து முரளி அதில் ஏறியபோது, பிரதீப் திடீரென டிராக்டரை இயக்கினார். இதில் நிலைத்தடுமாறி முரளி கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதீப் அங்கிருந்தவர்கள் உதவியுடன் முரளியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார், ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று முரளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story