கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கெடிலம் ஆற்றில் கொட்டி தீ வைப்பு டிராக்டரை தி.மு.க.வினர் சிறைபிடித்ததால் பரபரப்பு


கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட  மருத்துவ கழிவுகள் கெடிலம் ஆற்றில் கொட்டி தீ வைப்பு டிராக்டரை தி.மு.க.வினர் சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:02 PM IST (Updated: 6 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருத்துவகழிவுகளை கெடிலம் ஆற்றில் கொட்டி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர், 

கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்ஸ் பவன் சாலையில் உள்ள முதியோர் இல்லம் எதிரே கெடிலம் ஆற்றங்கரையோரம் நேற்று மதியம் டிராக்டரில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து சிலர் கொட்டினர். கெடிலம் ஆற்றில் குவிந்த அந்த மருத்துவ கழிவுக்கு அவர்கள், தீ வைத்து கொளுத்தினர்.

 குபுகுபுவென எரிந்த தீயால், அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதை அறிந்ததும் தி.மு.க. நகர செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகி சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரை காரில் துரத்திச்சென்ற தி.மு.க.வினர் கம்மியம்பேட்டை பாலம் அருகில் மடக்கி, டிராக்டரை சிறைபிடித்தனர்.

அதிகாரிகள் அதிர்ச்சி 

பின்னர் அந்த டிராக்டர் டிரைவரிடம் எங்கிருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல அலுவலர் பாஸ்கரன் (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் டிராக்டர் டிரைவரிடம் மருத்துவ கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று விசாரணை நடத்தினர். அதற்கு அவர் கடலூர் அருகே உள்ள தோட்டப்பட்டு தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டி விட்டு செல்வதாக தெரிவித்தார். அதில் கொரோனா நோயாளிகள், டாக்டர்கள் பயன்படுத்தி விட்டு போட்ட முழு கவச உடை மற்றும் மருத்துவக்கழிவுகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

ரூ.2 ஆயிரம் அபராதம்

இதையடுத்து ஊராட்சியில் உள்ள கழிவுகளை நகராட்சி பகுதிக்கு கொண்டு வரக்கூடாது. அதுவும் மருத்துவக்கழிவுகளை முறைப்படி தான் அகற்ற வேண்டும் என்று கூறி டிரைவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து டிராக்டர் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story