‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு


‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:10 PM IST (Updated: 6 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 18,503 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 14,273 மனுக்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வரப்பெற்றுள்ளது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் முழுமை பெறாத அதாவது பெயர், கிராமத்தின் பெயர், தொலைபேசி எண் மற்றும் கோரிக்கை மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பின் அவற்றை நிராகரிக்காமல், மனுதாரரின் இருப்பிடத்திற்கு சென்று முழுமையாக விசாரணை செய்து தேவையான ஆவணங்களை பெற்று அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தவறான பதில் அளிக்க கூடாது

இணையத்தில் . ஏற்பு என குறிப்பிடப்படும் இனங்களை முதல்-அமைச்சரின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலமாக மனுதாரரை தொடர்பு கொண்டு கடலூரில்  விசாரணை செய்யப்படும்.
எக்காரணம் கொண்டும் மனுதாரரை ஆவணங்களை காரணங்காட்டி அலைக்கழிக்காமல் அலுவலர்களால் பெறக்கூடிய ஆவணங்களை அலுவலர்களே பெற வேண்டும் என்றும், இந்த இணையத்தளத்தில் தவறுதலாக பதிந்து தவறான பதிலினை அளிக்கக் கூடாது.

முதியோர் உதவித்தொகை மற்றும் பிறத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை கோரிய மனுக்களை கனிவுடன் பரிசீலனை செய்து அவர்களுக்கு தகுதியான உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரே மனுவில் பலவித கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருப்பின் துறை தொடர்பான கோரிக்கையினை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர், சாலை வசதி

 குடிநீர் வசதி, சாலை வசதி கோரிக்கையாக இருப்பின் உரிய அலுவலர் அப்பகுதியினை நேரில் பார்வையிட்டு உண்மைத்தன்மையை ஆராய்ந்து அம்மனுமீது தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது தீர்வு காண்பதில் ஐயப்பாடு ஏற்படின் தனித்துணை ஆட்சியரை தொடர்பு கொள்ளவேண்டும்.

மேற்படி பணியை மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் (உறுப்பினர்), திட்ட இயக்குனர், விருத்தாலம் சப்-கலெக்டர் (மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்), சிதம்பரம் சப்-கலெக்டர் (உறுப்பினர்), கடலூர் கோட்டாட்சியர் (உறுப்பினர்), தனித்துணை ஆட்சியர் (உறுப்பினர்), மின் மாவட்ட மேலாளர் (உறுப்பினர்) இக்குழுவின் உறுப்பினர்கள் மேற்படிபணியினை கண்காணிப்பார்கள்.

பயனாளிகள் பட்டியல்

மாவட்டத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்ட 14,273 மனுக்களும், நிலுவையில் உள்ள 4,230 மனுக்களையும் வருகிற 15-ந் தேதி க்குள் தீர்வு காணப்படவேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்கின்ற பயனாளிகள் பட்டியல் விவரத்தை ‘ஐ” பிரிவு மின்னஞ்சலுக்கு (oapc uddalore@gmail.com) அனுப்பிட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முதல்-அமைச்சரின் நேரடி கவனத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளதால், இப்பணியில் தொய்வின்றி பணியாற்றி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனுக்களை முடிவு செய்து, பதில் அளித்திட அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி) மகேந்திரன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், சமூக நல அலுவலர், வேலை வாய்புத்துறை அலுவலர், மின்வாரிய அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story