சாராய ஊறல்கள் அழிப்பு- 4 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளியில் சாராய ஊறல்களை அழித்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளியில் சாராய ஊறல்களை அழித்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சாராய வேட்டை
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதை பயன்படுத்திய மதுப்பிரியர்கள் போதைக்காக ஆங்காங்கே சாராய ஊறல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி, அந்தந்த பகுதியில் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளி கிராமத்தில் சிலர் சாராய ஊறல் போடுவதாக செம்பனார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சாராய ஊறல் பறிமுதல்-4 பேர் கைது
அப்போது செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளி கிராமத்தில் சந்தேகப்படும் பகுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 4 இடங்களில் சாராய ஊறல் போட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பூமிக்கு அடியில் போட்டிருந்த 720 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுதொடர்பாக பழைய திருச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), தினேஷ் (20), சுப்ரமணியன் (46), கபிலன் (27) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story