காய்ச்சலுக்கு அதிகம் பேர் சிகிச்சைக்கு வந்தால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்-கலெக்டர் உத்தரவு


காய்ச்சலுக்கு அதிகம் பேர் சிகிச்சைக்கு வந்தால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்-கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:36 PM IST (Updated: 6 Jun 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

காய்ச்சலுக்கு ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சிகிச்சைக்கு வந்தால் அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

திருப்புவனம்,

காய்ச்சலுக்கு ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சிகிச்சைக்கு வந்தால் அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? நோய் தொற்றை குறைக்க டாக்டர்கள் எடுத்து வரும் அர்ப்பணிப்பை பாராட்டி அவர்களை ஊக்குவித்து வருகிறார்.
இந்த வகையில் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் கோவிட்-19-க்கான பரிசோதனை மையம் செயல்படுவதை பார்வையிட்டும் நாள்தோறும் பரிசோதிக்க வருபவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
சிகிச்சை முகாம் நடத்த வேண்டும்
பின்பு உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வது குறித்து பார்வையிட்டார். பின்னர் மருந்துகள், மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து கலெக்டர் அங்கிருந்த டாக்டர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மருத்துவர்கள் காலதாமதமின்றி உடனுக்குடன் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூற வேண்டும். சிலர் சாதாரண காய்ச்சல் என்று எண்ணி 2 நாட்களுக்கு மாத்திரைகள் சாப்பிட்டு சரியாக இல்லை என்று காலம் கடந்து வரும்போது நோய் தொற்று அதிகரிக்கும் நிலை உருவாகும். எனவே இதை தவிர்க்கும் வண்ணம் உடல் நிலை பாதிப்பு குறித்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும்., அதேபோல் ஒரே பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கை கொண்ட நோயாளிகள் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்தால், அப்பகுதிக்கு மருத்துவர் குழு அமைத்து உடனடியாக சிறப்பு முகாம் நடத்தி அனைவரையும் உடல் பரிசோதனை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி

 மேலும் கொரோனா தொற்று தடுப்பிற்கு மிக முக்கியமான ஒன்று தடுப்பூசி போடுவதாகும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பதற்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story