மலைப்பகுதியில் மழை; சேர்வலாறு அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக சேர்வலாறு அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது.
நெல்லை, ஜூன்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சேர்வலாறு அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது.
பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சங்கரன்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது.
இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 134.50 அடியாக உள்ளது. அணைக்கு 888.13 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,292.25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
156 அடி முழுக்கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 140.48 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் வருகிறது. 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வடக்கு பச்சையாறு அணை 39.70 அடியாகவும், நம்பியாறு அணை 12.43 அடியாகவும், கொடுமுடியாறு 28 அடியாகவும், கடனா அணை 74 அடியாகவும், ராமநதி 64 அடியாகவும், கருப்பாநதி 59.77 அடியாகவும் உள்ளது.
அடவிநயினார் அணை
அடவிநயினார் அணைப்பகுதியில் நேற்று 23 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் 83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.
செங்கோட்டை, புளியரை பகுதியில் பெய்த மழையில் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
செங்கோட்டை, தென்காசி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக செங்கோட்டை பகுதியில் முன் குறுவை சாகுபடி, நெல் நாற்றுபாவும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அடவிநயினார்-23, பாபநாசம்-2, சேர்வலாறு-2, களக்காடு-3, கருப்பாநதி-10, குண்டாறு-3, சங்கரன்கோவில்-4, சிவகிரி-4, தென்காசி-6.
Related Tags :
Next Story