திருமயத்தில் அதிகபட்சமாக 192 மில்லி மீட்டர் மழை பதிவு


திருமயத்தில் அதிகபட்சமாக 192 மில்லி மீட்டர் மழை பதிவு
x
தினத்தந்தி 7 Jun 2021 1:23 AM IST (Updated: 7 Jun 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் 192 மில்லி மீட்டர் அளவு பதிவாகி இருந்தது

புதுக்கோட்டை
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பருவ மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தில் கடந்த 4-ந் தேதியும், நேற்று முன்தினமும் மாலையில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை பெய்து கொண்டே இருந்தது. குறிப்பாக திருமயத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமயத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
திருமயத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் 2 மணி நேரம் மின்சார நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக திருமயம் பகுதியில் உள்ள தாமரை கண்மாய், வேங்கை கண்மாய், கருங்குளம் ஆகிய குளங்களில் மழை நீர் நிரம்பியது. வயல் பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கியது.  திருமயம் ஊராட்சியில் தாழ்வான பகுதிகளான மணலிக்கரை, சந்தைப்பேட்டை, எழில் நகர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால் வெட்டப்பட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.  திருமயத்தில் அதிகபட்சமாக 192 மில்லி மீட்டர் மழை பதிவானது

Next Story