வெளியூர்களில் இருந்து ஏற்காட்டிற்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்
வெளியூர்களில் இருந்து ஏற்காட்டுக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
வெளியூர்களில் இருந்து ஏற்காட்டுக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு தினமும் 1000 பேருக்கும் மேல் பதிவாகி வருகிறது. ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. எனவே ஊரடங்கை மேலும் ஒரு வாரம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே சேலம், நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சில தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மளிகை, காய்கறி கடைகள்
அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக செயல்படும் மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏற்காட்டிற்கு வர இ-பதிவு நடைமுறை அமலில் இருந்தது. இதன்மூலம் பலர் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து உடனுக்குடன் ஏற்காட்டுக்கு வந்து சென்றனர். பலர் இ- பதிவு நடைமுறையை தவறாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இ-பாஸ் கட்டாயம்
இந்தநிலையில் ஏற்காட்டிற்கு வாகனங்களில் வரும் நபர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டிற்கு அவசர காரணங்களுக்காக வருகிறவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பெற அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற காரணங்களுக்கு மட்டும் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story