கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்டதால் உறவினர்கள் சோகம்


கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்டதால் உறவினர்கள் சோகம்
x
தினத்தந்தி 7 Jun 2021 5:18 AM IST (Updated: 7 Jun 2021 5:30 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மின்தகன எந்திரம் 2 முறை பழுதடைந்ததால், எரிவாயு மேடையில் எரியூட்ட முடியாத நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டது. இதனால் இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் உறவினர்கள் சோகமடைந்தனர்.

அரியலூர்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக அரியலூரில் உள்ள மின்தகன எரிவாயு மேடை, சுமார் 10 நாட்களுக்கு முன்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த தகனமேடை செயல்பாட்டில் அரிமா சங்கத்தினர் தன்னார்வலராக பொறுப்பேற்று, குறைந்த தொகையை பெற்று இறந்தவர்கள் உடல்களை எரியூட்டி, அஸ்தியை உறவினர்களிடம் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் மின்தகன எரிவாயு மேடையில் தொடர்ந்து 3 நாட்களில் இரண்டாம் முறையாக பழுது ஏற்பட்டது. இதனால், இறந்தவர்கள் உடலை தகனம் செய்ய கொண்டு வரும் அரசு அதிகாரிகளும், இறந்தவர்களின் உறவினர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 உடல்களை மின்தகனம் செய்ய வேண்டிய நிலையில் 4-வது நபரின் உடலை எரித்தபோது, மின்தகன எந்திரம் பழுதடைந்தது. இதனால் மற்ற 13 பேரின் உடல்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு எந்திரம் பழுதுநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 12 உடல்களை மின்தகனம் செய்ய வேண்டிய நிலையில் 3 நபரின் உடலை எரித்தபோது மின்தகன எந்திரம் பழுதடைந்தது. இதனால் மற்ற 9 பேரின் உடல்களை குழிதோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டது.

எரிவாயு தகன ேமடையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்து உறவினர்களுக்கு அஸ்தியை கொடுப்பதால், கொரோனா அச்சமின்றி, அஸ்தியை நீர்நிலைகளில் கரைத்து, இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய முடிகிறது. இதனால் உறவினர்கள் மனதளவில் ஆறுதல் பெற்றனர். ஆனால் மின்தகன எந்திரம் பழுதால், கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்டதால், இறுதிச்சடங்கு செய்ய முடியாத நிலையில் அவர்களுடைய உறவினர்கள் சோகமடைந்தனர்.

இதுமட்டுமின்றி உடல்களை அடக்கம் செய்யும் அலுவலர்களும், ஒரேநேரத்தில் 10-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ய மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் எரிவாயு தகன எந்திரம் சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினமும், நேற்றும் அங்கு உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.
இருப்பினும் மீண்டும் எந்திரம் பழுதாகி உடல்கள் எரியூட்டப்படுவதில் தடை ஏற்படுமோ? என்ற அச்சம் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உள்ளது. எனவே மீண்டும் மின்தகன எந்திரம் பழுதாகாத வகையில், தொடர்ந்து நல்லநிலையில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story