நர்சு வீட்டில் 30 பவுன் நகை திருட்டு


நர்சு வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 7 Jun 2021 5:34 AM IST (Updated: 7 Jun 2021 5:34 AM IST)
t-max-icont-min-icon

நர்சு வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஆவடி,

ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 51). நர்சான இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்களுக்கு ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது கணவர் பஞ்சாட்சரம், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் தங்கி, வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் தனலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அடிக்கடி மயங்கி விழுந்து விடுவார். இதற்காக சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த அவரது உறவுக்கார பெண்கள் 2 பேர், அடிக்கடி அவரது வீட்டிக்கு வந்து அவருக்கு உதவியாக இருந்து வந்தனர். கடந்த மாதம் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.

30 பவுன் நகை திருட்டு

இந்த நிலையில் நேற்று மதியம் தனலட்சுமி வீட்டின் பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சுமார் 30 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.50 ஆயிரம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது.

இதுகுறித்து தனலட்சுமி ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது வீட்டில் தங்கி இருந்த உறவுக்கார பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்ெறாரு சம்பவம்

அதேபோல் போரூரை அடுத்த முகலிவாக்கம், வி.என்.டி. அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (37). இவர், கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான பழனிக்குச் சென்று விட்டார். நேற்று காலை அவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட வீட்டின் உரிமையாளர், இதுபற்றி சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று மாங்காடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 25 பவுன் நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story