சென்னையில் 3 ரெயில் நிலையங்களில் ஒரே நாளில் ரூ.36 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது


சென்னையில் 3 ரெயில் நிலையங்களில் ஒரே நாளில் ரூ.36 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 12:11 AM GMT (Updated: 7 Jun 2021 12:11 AM GMT)

சென்னையில் ஒரே நாளில் 3 ரெயில் நிலையங்களில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் மதுபானங்கள் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிரமாக கண்காணித்து, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து, மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில், நேற்று சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பார்சல் அலுவலகத்தில் சந்தேகத்துக்கிடமான 3 பார்சல்கள் வந்திருப்பதை கண்ட போலீசார், அதனை பிரித்து பார்த்தனர்.

அப்போது அந்த பார்சலில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த மதுபாட்டில்கள் அடங்கிய பார்சல் எங்கிருந்து வந்தது, அதனை யாருக்கு அனுப்பி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பாட்டில்களை பார்சலில் கொண்டு வந்தவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலேஷ் குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

23 பாட்டில்கள்

அதேபோல், சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்றதும், அதில் இருந்து பெண் ஒருவர் இறங்கினார்.

சந்தேகத்தின் பேரில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவரை விசாரித்து அவரது பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 23 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளா மாநிலம், திருச்சூரை சேர்ந்த தேவி கிருஷ்ணன்(25) என்பதும், சட்டவிரோதமாக கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை தமிழகத்துக்கு ரெயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

பெண் கைது

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 257 மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் பேசின் பாலம் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் நேற்று கேட்பாரற்று கிடந்த பையை, பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் அஞ்சம்மா கவனித்துக்கொண்டிருந்தார்.

இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் ரூ.7,180 மதிப்புள்ள 20 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 3 ரெயில் நிலையங்களில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story