கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2021 2:24 PM GMT (Updated: 7 Jun 2021 2:24 PM GMT)

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்கால், 

புதுச்சேரியில் கொரோனாவுக்கு தினமும் 15-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர். அவர்களது உடல்களை அரசின் வழிகாட்டுதலின்படி அடக்கம், தகனம் செய்யப்படுகிறது. இதில் தன்னார்வ அமைப்பினரும் தாமாக முன்வந்து இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காரைக்காலில் கொரோனாவால் இறந்த ஒருவரின் உடலை கிதர்பள்ளியில் அடக்கம் செய்யும் பணியில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதிகப்படியான கூட்டம் கூடியதால் தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து காரைக்கால் மாவட்ட போலீஸ்துறை தலைமை அலுவலகத்தில், கொரோனா உடல் அடக்க குழுவில் இடம்பெற்றுள்ள குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட தலைவர் ராஜா முகம்மது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் பேசியதாவது:-

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களை, அவரவர் மத சடங்குகள்படி அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். அடக்கம் செய்யும்போது இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போலீஸ்துறை செய்யும். இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story