கனகன் ஏரியில் மாசடைந்த தண்ணீர் வெளியேற்றம் நீர் வற்றியதால் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது
கனகன் ஏரியில் மாசடைந்த தண்ணீர் வெளியேற்றப்படுவதால் மீன்கள் செத்து வருகின்றன.
புதுச்சேரி,
புதுவை கனகன் ஏரியில் கழிவுநீர் கலப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மீன்கள் செத்து மிதந்தன. இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்தனர். மேலும் ஏரியில் இருந்த தண்ணீர் சோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
சோதனையில் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும், இதனால் மீன்கள் செத்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் கனகன் ஏரியில் அப்பகுதியில் இருந்து கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசுபட்டு மீன்கள் செத்து மிதப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து நவீன எந்திரம் மூலம் ஏரி தண்ணீர் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதற்கிடையில் மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதை நிரந்தரமாக தடுக்க ஏரியை தூர்வார அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஏரியில் தேங்கியுள்ள மாசடைந்த தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தண்ணீர் வற்றிய நிலையில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர சாப்பிடுவதற்கு உகந்தது அல்லாத மீன்கள் ஆங்காங்கே குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
இதில் இருந்து தற்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே செத்த மீன்களை முறையாக அப்புறப்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story