தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர மோட்டார் வாகன ஒர்க் ஷாப்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர மோட்டார் வாகன ஒர்க் ஷாப், உதிரி பாகம் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர மோட்டார் வாகன ஒர்க் ஷாப், உதிரி பாகம் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவியது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட தூரத்தில் இருந்தும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து வந்தனர்.
கடந்த 2 வாரமாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாகன ஒர்க் ஷாப் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் நீண்ட தூரம் வாகன பயணம் காரணமாக வாகனங்களில் சிறு, சிறு பிரச்சினைகள் வரத் தொடங்கி உள்ளன.
ஒர்க் ஷாப்
இந்த நிலையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி மோட்டார் வாகன ஒர்க் ஷாப் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஏராளமான வாகன ஓட்டிகள் காலை முதல் தங்கள் இருசக்கர வாகனங்களை ஒர்க் ஷாப்பில் கொடுத்து பராமரிப்பு பணியை மேற்கொண்டனர்.
மேலும் தொடர்ந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதால், பணிக்கு செல்வதற்கு ஏதுவாக தங்கள் வாகனங்களை பராமரிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒர்க் ஷாப் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதைத் தொடர்ந்து கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story