நாகையில் 14 நாட்களுக்கு பிறகு மளிகை, காய்கறி கடைகள் திறப்பு
தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நாகையில் 14 நாட்களுக்கு பிறகு மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நாகையில் 14 நாட்களுக்கு பிறகு மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தளர்வுகளுடன் ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு 2 வாரம் அமலில் இருந்து வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மருந்தகங்கள், பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஓட்டல்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டது. நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நிறைவடைந்தது.
இந்த நிலையில் சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கடைகள் திறப்பு
கொரோனா தொற்று பரவல் பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்தபோதிலும் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் 14-ந்தேதி வரை கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் வாங்க திரண்டனர்
நாகை கடைத்தெருவில் பலசரக்கு, மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும் சில இடங்களில் பேன்சி கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள் திறந்திருந்தன. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த கடைகளை அடைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என போலீசார் வலியுறுத்தி கொண்டிருந்தனர். உத்தரவை மீறி திறக்கப்பட்ட சில கடைகளுக்கு வருவாய் துறையினர் அபராதம் விதித்தனர். இரண்டு வாரங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த பொதுமக்கள், கடைகள் திறக்கப்பட்டதால் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் அதிக அளவில் சென்றதால் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது.
நாகூர்
நாகையை அடுத்த நாகூர் தர்கா மார்க்கெட்டில் கோழி, இறைச்சி விற்பனை செய்யும் கடைகளை வியாபாரிகள் ஆர்வமுடன் திறந்து வைத்திருந்தனர். ஆனால் இறைச்சி வாங்க பொதுமக்கள் வராததால் வியபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மளிகை, காய்கறி கடைகள் திறந்திருந்தன.
Related Tags :
Next Story