பெங்களூரு அருகே பயங்கரம்: ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் படுகொலை தலைமறைவான உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூரு அருகே பயங்கரம்: ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் படுகொலை தலைமறைவான உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2021 9:28 PM IST (Updated: 7 Jun 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான உறவினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிகாரி பாளையாவில் வசிக்கும் வியாபாரியின் மகன் முகமது ஆசிப் (வயது 10). இந்த சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் விட்டான். முகமது ஆசிப்பை, அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் அவனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சிறுவனின் தந்தையான வியாபாரிக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒரு மர்மநபர், உங்களது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவன் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி, ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜிகனி அருகே நஞ்சாபுரா கிராமத்தில் ஒரு சிறுவன் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முகமது ஆசிப் தான் அந்த சிறுவன் என தெரிந்தது.

அந்த சிறுவனின் தலையில் கல்லால் தாக்கியும், தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்திருந்தது தெரியவந்தது. சிறுவனை கடத்திய நபர்களே இந்த கொலையை செய்திருப்பதையும் போலீசார் உறுதி செய்தார்கள்.

இதற்கிடையில், சிறுவனின் தந்தையான வியாபாரியின் வீட்டில், அவருடைய உறவினரான முகமது ஜாவித் சேக் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. சமீபத்தில் தான் அவர், வெளிமாநிலத்தில் இருந்து ஹெப்பகோடிக்கு வந்திருந்ததும் தெரிந்தது. மேலும் முகமது ஜாவித் சேக்கின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதும், இதன் காரணமாக அவரே சிறுவனை கடத்தி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், கொலையும் செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட முகமது ஜாவித் சேக்கை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story