பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது


பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 9:32 PM IST (Updated: 7 Jun 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டார். செருப்பு மூலம் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை கைது செய்திருந்தனர்.

பெங்களூரு, 

கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக். வாலிபரான இவர், பெங்களூருவில் தங்கி இருந்து பேப்பர் பொறுக்கி, அவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் தான் அசோக் தினமும் படுத்து தூங்குவது வழக்கம். கடந்த மாதம் (மே) 15-ந் தேதி பூங்காவில் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் அசோக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியாமல் இருந்தது. அரிவாளால் அசோக்கின் தலையில் வெட்டி மர்மநபர்கள் கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஹெண்ணூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், அசோக்கை கொலை செய்ததாக சக தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கைதான தொழிலாளியின் பெயர் சதீஸ் என்பதாகும். இவர், கோலார் மாவட்டம் மாலூரை சேர்ந்தவர் ஆவார். சதீசும், பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தினார். அசோக் தங்கிய அதே பூங்காவில் தான் தினமும் இரவில் சதீசும் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல், கடந்த மாதம் 14-ந் தேதி இரவில் பூங்காவில் உள்ள ஒரு இடத்தில் படுத்து தூங்குவது தொடர்பாக அசோக் மற்றும் சதீஸ் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த சதீஸ் அரிவாளால் அசோக்கின் தலையில் 12 முறை வெட்டிக் கொலை செய்திருந்தார்.

அசோக் மற்றும் சதீஸ் செல்போன்  பயன்படுத்துவதில்லை. கொலை நடந்த இடத்தில் வேறு எந்த தடயமும் போலீசாருக்கு சிக்கவில்லை. அசோக்கின் ரத்தம் கொலையாளியான சதீசின் செருப்பு முழுவதும் பட்டு இருந்தது. அதாவது அசோக்கின் தலையில் இருந்து வெளியேறி சிதறி கிடந்த ரத்தத்தின் மீது சதீஸ் தான் அணிந்திருந்த செருப்புடன் நடந்திருந்தார். அந்த செருப்பு தடம் மட்டும் கொலை நடந்திருந்த இடத்தில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, கொலை நடந்த பூங்கா, அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் படுத்து தூங்கும் 50 நபர்களை பிடித்த போலீசார், அவர்கள் அணிந்திருந்த செருப்பை தண்ணீரில் மூழ்கடித்து, பின்னர் மணலில் வைத்து அமுக்க வைத்தனர். அவ்வாறு 50 பேரும் செய்ததில் சதீஸ் அணிந்திருந்த செருப்பின் தடமும், பூங்காவில் ரத்த கறையுடன் பதிவாகி இருந்த செருப்பின் தடமும் ஒரே போல் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, சதீசை பிடித்து விசாரித்த போது தான், அசோக்கை கொலை செய்திருந்ததை போலீசாரிடம் ஒப்புக் கொண்டு இருந்தார். கைதான சதீஸ் மீது ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story