உடுமலையில் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன


உடுமலையில்  மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 7 Jun 2021 9:47 PM IST (Updated: 7 Jun 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் நேற்று மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.

உடுமலை
உடுமலையில் நேற்று மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
முழு ஊரடங்கில் தளர்வு
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வருவதைத்தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி மருந்து கடைகள், பால்கடைகள் ஆகியவற்றை தவிர மற்ற கடைகளை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் பொதுமக்களின் அன்றாடத்தேவைக்கு பயன்படும் காய்கறிகள் கிடைப்பதற்காக நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
இந்த நிலையில் அரசு நேற்று காலை 6 மணி முதல் முழு ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டுவந்து அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், இறைச்சி கடைகள், மீன்கடைகள் ஆகியவை காலை 6 மணி  முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
காய்கறி கடைகள்
இதைத்தொடர்ந்து நேற்று உடுமலையில் கபூர்கான் வீதியில் உள்ள காய்கறி கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. உழவர்சந்தையை திறக்க அனுமதி இல்லாததால் உழவர்சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளில் சிலர் உழவர்சந்தைக்கு முன்புறம் திறந்த வெளியில் காய்கறிகடைகளை வைத்திருந்தனர். சில விவசாயிகள் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் விற்பனை செய்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்த வாகனங்கள் விற்பனைக்காக வெளிப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றன. உழவர்சந்தை பகுதியில் பல வியாபாரிகளும் திறந்த வெளியில் காய்கறி  கடைகளை வைத்திருந்தனர். உழவர்சந்தை திறக்கப்படாததால் சில விவசாயிகள் காய்கறிகளை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரவில்லை என்று கூறப்படுகிறது.
தினசரி சந்தை திறப்பு
விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் உழவர்சந்தை திறக்கப்படாத நிலையில், உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி காய்கறிசந்தை திறக்கப்பட்டிருந்தது. அங்கு வியாபாரம் நடந்தது. ராஜேந்திரா சாலையில், சாலையோரம் திறந்த வெளியில் காய்கறிகடைகள் வைக்கப்பட்டிருந்தன. அங்கும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். 
அதேபோன்று பல்வேறு இடங்களில் காய்கறிகடைகள் திறந்திருந்தன. பெரிய பழக்கடைகள் மற்றும் சாலையோரம் உள்ள பழக்கடைகள் ஆகியவையும் திறந்திருந்தன. தள்ளுவண்டிகளிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்தது.
மளிகை, இறைச்சி கடைகள்
மளிகைக்கடைகள் திறந்திருந்தன. சில மளிகைக்கடைகளில் மட்டும் கூட்டம் இருந்தது. பெட்டி கடைகளும் திறந்திருந்தன. ஜவுளிகடைகள், நகைகடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்கி வருவதற்கு கால அவகாசம் இல்லாததால் பல ஆட்டிறைச்சி கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. பல மீன்கடைகளிலும் மீன்கள் இல்லை. ஒருசில கடைகளில் மட்டும் மீன் இருந்தது. அந்த கடைகளில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story