திண்டுக்கல் அருகே கண்மாயில் கிராவல் மண்ணை வெட்டி எடுக்கும் கும்பல்
திண்டுக்கல் அருகே கண்மாயில் அனுமதியின்றி கிராவல் மண்ணை மர்ம கும்பல் அள்ளி வருவதை தடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே அ.வெள்ளோட்டில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் அந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது அந்த கண்மாயில் தண்ணீர் இல்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த கண்மாயில் அனுமதியின்றி இரவு-பகலாக கிராவல் மண்ணை ஒரு கும்பல் வெட்டி எடுத்து வருகிறது. பொக்லைன் எந்திரத்தை வைத்து கிராவல் மண்ணை அள்ளி, லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனர்.
இதனால் கண்மாயில் பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. சுமார் 10 அடி ஆழமாக இருந்த கண்மாய், தற்போது மண்ணை வெட்டி எடுத்ததால் 20 அடி ஆழமாக மாறிவிட்டது. கிராவல் மண் மட்டுமின்றி, கண்மாய்க்கு அருகில் உள்ள இடங்களில் செம்மண்ணையும் அள்ளுகின்றனர். இதனால் பெரியகுளம் கண்மாயில் மண் வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த கண்மாயின் கரை பகுதியில் அ.வெள்ளோடு கிராம கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தை ஒட்டியுள்ள கண்மாய் பகுதியில் ஆழமாக குழிகள் தோண்டப்படுவதால் கல்லறைகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அ.வெள்ளோடு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அ.வெள்ளோடு பெரியகுளம் கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம மக்கள், இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story