திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 2 வாரங்களுக்கு பிறகு காய்கறிகள் விற்பனை
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 2 வாரங்களுக்கு பிறகு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா அருகே காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த நிலையில் காந்திமார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் நலனுக்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து காந்திமார்க்கெட் அருகே சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காந்தி மார்க்கெட்டில் உள்ள சாலையோர கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நேற்று முதல் மளிகை, காய்கறி விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி காந்திமார்க்கெட் பகுதியில் 2 வாரங்களுக்கு பிறகு வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்தனர். இதையறிந்த பொதுமக்களும் அங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
இதனிடையே திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் காந்தி மார்க்கெட் வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைவர் சிவமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில், பொருளாளர் கோட்டையன்ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மார்க்கெட்டின் வெளிப்புறத்தில் காய்கறி கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். மொத்த வியாபாரிகள் காய்கறிகளை சில்லரைக்கு விற்க அனுமதிக்க கூடாது. காந்தி மார்க்கெட் திறக்கப்பட்டதும் ஏற்கனவே வைப்பு தொகை செலுத்திய வியாபாரிகளுக்கே கடைகளை ஒதுக்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story