டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகன்களுக்கு கொரோனா பரிசோதனை


டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகன்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 7 Jun 2021 10:04 PM IST (Updated: 7 Jun 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகன்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பொள்ளாச்சி

டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகன்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

யானைகள் முகாம்

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பாகன்கள், உதவியாளர்கள் என 60 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கோழிகமுத்தி கிராமத்தில் பழங்குடியினர் 300 பேர் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கிய ராஜ் சேவியர் கூறியதாவது:-

தடுப்பூசி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நிரந்தர முகாமாக கோழிகமுத்தியும் மாற்று முகாமாக வரகளியாறும் உள்ளது. பெருந்தொற்று காலத்தில் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் வழக்கமான பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகின்றன. பாகன்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வேட்டை தடுப்பு காவலர், வனகாவலர், வன காப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலையிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மற்றும் பாகனங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பாகன்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் யானைகள் முகாமாக கோழிகமுத்தி உள்ளது.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் யானை பாகனங்கள், உதவியாளர்கள் என 60 பேருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கோழிகமுத்தி மற்றும் டாப்சிலிப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

முகாமில் பணியாற்றும் பாகனங்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story