திண்டுக்கல்லில் பழுது நீக்கும் நிலையங்களில் குவிந்த மோட்டார் சைக்கிள்கள்
திண்டுக்கல்லில் பழுது நீக்கும் மையங்களில் மோட்டார் சைக்கிள்கள் குவிந்தன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், வாகன பழுதுநீக்கும் நிலையங்கள் மூடப்பட்டன.
இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல மோட்டார் சைக்கிள்களையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். சிலர் இ-பதிவு செய்து வெளிமாவட்டங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வந்தனர். இதனால் தினமும் குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டர்களுக்கு மேல் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக திண்டுக்கல்லை சேர்ந்த பலரின் மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்துவிட்டன. அதேநேரத்தில் ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியே செல்லாதவர்களின் மோட்டார் சைக்கிள்களும் பயன்பாடு இல்லாமல் 2 வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பழுதடைந்தன. அவற்றை சீரமைக்க பழுதுநீக்கும் நிலையங்கள் எப்போது திறக்கும்? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நேற்று முதல் வாகன பழுது நீக்கும் நிலையங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் நிலையங்களில் நேற்று காலை முதலே மோட்டார் சைக்கிள்கள் குவிய தொடங்கின. இதுகுறித்து மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளி ஒருவரிடம் கேட்ட போது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பழுது நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த எங்களை போன்ற தொழிலாளர்கள் தற்போது தான் நிம்மதியடைந்துள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story