சார்பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்து பணி நடந்தது


சார்பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்து பணி நடந்தது
x
தினத்தந்தி 7 Jun 2021 10:25 PM IST (Updated: 7 Jun 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.இதில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு ஆவணப்பதிவேடு போன்ற பணிகள் நடைபெற்றது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தி நோய் பரவலை தடுக்கும் வகையில் 50 சதவீதம் டோக்கன் கொடுத்து பத்திரப்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.

 அதன்படி கடலூர் திருப்பாதிரிபுலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அலுவலகத்திற்கு வெளியே தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் போடப்பட்ட வட்டத்தில் நிற்க வைக்கப்பட்டனர். சிலர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டனர்.

டோக்கன்

முன்னதாக அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப நிலை அறியப்பட்டது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டும் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து டோக்கன் முறைப்படி ஒவ்வொருவராக அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

அதன்படி அவர்கள் சென்று தங்களுக்கு தேவையான பத்திரப்பதிவு, ஆவண பதிவேடு போன்ற பல்வேறு நடைமுறைகளை செய்தனர். புகைப்படம் எடுக்கும்போது மட்டும் முக கவசத்தை எடுத்து பின்னர் மீண்டும் அணிய வைக்கப்பட்டனர்.

அலுவலர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் பணி செய்தனர். விரல் ரேகை எந்திரத்தை பயன்படுத்த சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் போன்ற பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்கள், துணைப்பதிவாளர் அலுவலகங்களிலும் இதே அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

Next Story