வந்தவாசியில் கொரோனா அச்சமின்றி பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்
கொரோனா அச்சமின்றி பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
ஊரடங்கு தளர்வு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்தில் தொற்று குைறய தொடங்கியது. இதனை தொடர்ந்து 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மாலை 5 மணி வரை திறக்க நேற்று முதல் அனுமதிக்கப்பட்டது. பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைெவளியை கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க அரசு கேட்டுக்கொண்டது.
கடைவீதிகளில் திரண்டனர்
இந்த நிலையில் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே பொதுமக்கள் வீடுகளின் அருகில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்காமல் பஜார்களுக்கு படையெடுத்தனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர்.
திருவண்ணாமலை நகருக்குள் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். சாலையில் பஸ்களை தவிர அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன. போலீசார் அமைத்திருந்த சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று திறக்கப்பட்ட பெரும்பாலான கடைகளின் முன்பு கயிறு கட்டப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. அதில் நின்றபடி வரிசையாக வந்து வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி சென்றனர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் பொதுமக்கள் அதிகளவில் சாலைகளில் குவிந்தனர்.
வந்தவாசி
இதேபோல் வந்தவாசி கடைவீதிகளில் கொரோனா அச்சமின்றி மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கடைவீதிகளில் நெருக்கடியை குறைப்பதற்காக காவல்துறையினர் தடுப்பு வேலிகளை ஏற்படுத்தினர். அதையும் மீறி பொதுமக்கள் தங்கள் சைக்கிள்களை கைகளில் தூக்கிக்கொண்டு தடுப்புகளை தாண்டிச் சென்றனர்.
இதனால் கொரோனா தொற்று அதிகரித்து விடுமோ என அச்சம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசு வழிகாட்டுதலின்படி ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story