தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்: மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல்


தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்: மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 7 Jun 2021 10:41 PM IST (Updated: 7 Jun 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் கூட்டம் அலைமோதி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேற்று காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.

காய்கறி கடைகள் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் இந்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கையொட்டி காய்கறிகள், மளிகை கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கடலூரில் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.


கடலூர் பாரதி சாலையில் வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் படிப்படியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டது.இது தவிர மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் இந்த கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

அரசு அலுவலகங்கள்

அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளதால், நேற்று சுகாதாரம், வருவாய்த்துறை, கூட்டுறவு, உள்ளாட்சி மன்றங்கள், கருவூலம், சமூக நலத் துறை, பொதுப்பணித்துறை, மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு போன்ற பல்வேறு துறை அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது.

வங்கி சேவைகளுக்கும் அனுமதி அளித்துள்ளதால் காலை முதலே வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் நீண்ட வரிசையில் நின்று தங்கள் பணிகளை முடித்து விட்டு சென்றனர்.


 வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் பஞ்சர் ஒட்டுதல், உதிரிபாகங்களை மாற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகளும் திறக்கப்பட்டதால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.

 எலக்ட்ரிக்கல் பொருட்கள், பல்புகள், கேபிள் ஒயர்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன. ஹார்டுவேர்ஸ், புத்தகக் கடைகளும் திறக்கப்பட்டு, அதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து பொருட்களை பெற்றுச்சென்றனர்.

இயல்பு நிலை

எலக்ட்ரீசியன், பிளம்பர், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்கள் பழுது நீக்குவோர், தச்சுத் தொழிலில் ஈடுபடுவோரும் தங்கள் வேலையை தொடங்கினர். ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. ஆனால் இ-பதிவு பெற்று இயக்க உத்தரவிட்டதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை.

 இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டதால் போன்ற பல்வேறு கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதன்மூலம் பொது மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர் என்றே கூறலாம்.

Next Story