லாரி- லோடு ஆட்டோ மோதல்; 2 பேர் பலி
பூதப்பாண்டி அருகே லாரி, லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே லாரி, லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
மார்பிள் ஏற்றி சென்றனர்
பூதப்பாண்டி அருகே கீழ ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது47), லோடு ஆட்டோ டிரைவர். இவரும், புளியங்குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (24), வடமாநில வாலிபர் சஞ்சய் (26) ஆகிய 3 பேரும் நேற்று மார்பிள் எடுப்பதற்காக லோடு ஆட்டோவில் நாவல்காடு பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து மார்பிள்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஈசாந்திமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். குமரன் ஆட்டோவை ஓட்டி செல்ல அவரது அருகில் சுபாஷ் அமர்ந்திருந்தார். சஞ்சய் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்து இருந்தார்.
அவர்கள் ஈசாந்திமங்கலம் சுடலைமாடன் கோவில் அருகே சென்ற போது எதிரே ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக லாரி, லோடு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
பரிதாப பலி
விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குமரனும், சுபாசும் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சஞ்சய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும், இறந்தவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
லோடு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story