கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறப்பு


கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:44 PM IST (Updated: 7 Jun 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதை யடுத்து கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து அதிகரித்தது.

கோவை

ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதை யடுத்து கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து அதிகரித்தது. 

அத்தியாவசிய கடைகள்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் மாநிலத்தில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் 14-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 14-ந் தேதி வரை தனியாக உள்ள மளிகை கடைகள், பூ பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், இறைச்சி, மீன் விற்பனையகங்கள், காய்கறி மற்றும் இறைச்சி மொத்தமாக விற்பனை செய்யும் சந்தைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு  மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனையகங்கள் திறக்கப்பட்டன. உக்கடம் சில்லறை விற்பனை மீன் மார்க்கெட் திறக்கப்படவில்லை. குளக்கரைகளில் மீன் விற்பனை நடைபெற்றது.

கூட்டம் அலைமோதியது 

மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ள ரங்கே கவுடர் வீதியில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது. 

அங்கு சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் கூட்டமாக நின்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியாக அறிவுறுத்தினார்கள். 

அதுபோன்று புலியகுளம் பகுதியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் ஏராளமான வாடிக்கையாளர் கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். 

காய்கறி மார்க்கெட்

பெரியகடை வீதி அருகே உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப்பட்டது.

 அப்போது தனியாக உள்ள கடைகளுக்கு மட்டுமே அனுமதி எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் கடையை திறந்த வியாபாரிகளை எச்சரித்தனர்.

இதையடுத்து அவர்கள் கடைகளை மூடினார்கள். மேலும் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறி வாங்க  அதிக கூட்டம் காணப்பட்டது. 

கோவையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகள் திறக்கப்பட்டதால் கோவை நகரின் பல பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. 

பொதுமக்கள் ஒத்துழைப்பு 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கடைகளை திறந்ததும் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால், இதுவரை போடப்பட்ட ஊரடங்கு வீணாகிவிடும். 

எனவே இந்த விஷயத்தில் பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து,  சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கினால் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம் என்றனர். 


Next Story