கொரோனா பரவல் எதிரொலியாக கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் மாவட்ட கலெக்டர் உத்தரவு
கொரோனா பரவல் எதிரொலியாக கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார்.
கரூர்
ஆய்வுக்கூட்டம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புபணிகள் குறித்து மண்டல வாரியாக ஆய்வு செய்தார்்.
எந்தெந்த பகுதிகளில் தொடர்ந்து தொற்றுப்பரவல் உள்ளது, அப்பகுதிகளில் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தார்.
தொற்றுப்பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்களை அதிகப்படுத்தவும், கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தினமும் அறிக்கை
தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளும் 119 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள். மண்டல அலுவலர்கள் முறையாக கண்காணித்து தினந்தோறும் கொரோனா குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்று இருந்தால் தொற்று பரவுவதற்கான காரணங்களை ஆராய்ந்து தடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்திடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ், கரூர் நகராட்சி ஆணையர் சுதா மண்டல அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story