ஊரடங்கு தளர்வுகள் அமல்; தென்காசியில் கடைகள் திறப்பு
ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதையொட்டி தென்காசியில் கடைகள் திறக்கப்பட்டன.
தென்காசி, ஜூன்:
ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் தென்காசியில் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
தளர்வுகள் அமல்
கொரோனா 2-வது அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்தன.
அதன்படி தென்காசியில் நேற்று தனியாக இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மின்சாதன பொருட்கள் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் ஒர்க் ஷாப்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், பழக்கடைகள் ஆகியன திறக்கப்பட்டன. அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் அரசு அலுவலகங்கள் இயங்கின.
போலீசார் சோதனை
தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் குறிப்பிட்ட பயணிகளுடன் இயக்கப்பட்டன. நகரின் நுழைவு பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களான சுவாமி சன்னதி பஜார், காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பகுதி, பழைய பஸ் நிலையம், யானை பாலம், குத்துக்கல்வலசை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போலீசார் வாகன சோதனையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு இருக்கிறதா? எனவும், வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? எனவும் சோதனை நடத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story