பஸ்நிலையங்களை தவிர அனைத்து பகுதிகளும் பரபரப்பாக இருந்தது


பஸ்நிலையங்களை தவிர அனைத்து பகுதிகளும் பரபரப்பாக இருந்தது
x
தினத்தந்தி 8 Jun 2021 1:52 AM IST (Updated: 8 Jun 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த படி மாவட்டத்தில் நேற்று தளர்வுகளுடனானஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பஸ்நிலையங்களைத்தவிர அனைத்து பகுதிகளும் பரபரப்பாகவே இருந்தது.

விருதுநகர்,
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த படி மாவட்டத்தில் நேற்று தளர்வுகளுடனானஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பஸ்நிலையங்களைத்தவிர அனைத்து பகுதிகளும் பரபரப்பாகவே இருந்தது. 
தளர்வுகள் 
தமிழகம் முழுவதும் நேற்று காலையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.  அதன்படி நேற்று மாவட்டத்தில் அரசு அனுமதித்துள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள்,எலக்ட்ரீக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் ஆகிய கடைகள் திறந்து இருந்தன. 
இதுதவிர பல பகுதிகளில் பெட்டி கடைகளும் திறந்திருந்தன. நடைபாதை கடைகள், பழக்கடைகள் நேற்று ஆங்காங்கே விற்பனையில் ஈடுபட்டதை காண முடிந்தது.
பரபரப்பு 
இறைச்சிக்கடைகளும், மீன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. வாகன உதிரிபாக கடைகள், புத்தகக் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவையும் திறக்கப்பட்டு இருந்தன.
முழுஊரடங்கிற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் கடைகள் திறக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் பரபரப்பான நிலை காணப்பட்டது. சாலைகளில் இருசக்கர வாகனங்களும் கார்களும் அதிக எண்ணிக்கையில் சென்று வருவதை காணமுடிந்தது.
 ஆட்டோக்கள் ஆட்டோ நிலையங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு சவாரி கிடைக்கவில்லை என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கூறும் நிலை இருந்தது.
அரசு அலுவலகம் 
 30 சதவீத பணியாளர்களுடன்  அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் பத்திரங்கள் பதிவு செய்ய 50 டோக்கன் வழங்கப்பட்டு இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் வரவில்லை. 
நேற்று மாவட்டம் முழுவதும் பரபரப்பாக இருந்த நிலையில் பஸ் நிலையங்கள் மட்டும் வெறிச்சோடிக் கிடந்தன. ெரயில் நிலையங்களில் தொலைதூர ெரயில்கள் வந்து சென்ற போதிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் நேற்று இயல்புநிலை ஏற்பட்ட சூழலே காணப்பட்டது. 
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு பஜார் பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பெரும்பாலான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்தனர். வழக்கத்தை விட இரு சக்கர வாகனம் மற்றும் கார்களின் எண்ணிக்கை நேற்று சாலைகளில் அதிக அளவு சென்றதை காண முடிந்தது. 
தளவாய்புரம் 
தளவாய்புரம், சேத்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்கள்,  பேக்கரி, மளிகை, பழக்கடை, ஆன்லைன் சென்டர் உள்ளிட்ட 60 சதவீத கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. 
ஒரு மாதத்துக்கு பிறகு இந்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிப்பால் பொதுமக்களும், வியாபாரிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story