ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்த திருமணம்; யானை மீது மணமகனை அமர வைத்து ஊர்வலம்
ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்த திருமணத்தில் யானை மீது மணமகனை அமர வைத்து ஊர்வலம் நடந்தது.
ஆலங்குளம் ஜூன்:
ஆலங்குளம் அருகே கொரோனா விதிமுறைகளை மீறி நடந்த திருமணத்தில் யானை மீது மணமகனை அமர வைத்து ஊர்வலம் நடந்தது.
கொரோனா அச்சுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதாவது திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் திருமண நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்களை அழைக்கிறார்கள். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் விதிமுறையை மீறி ஏராளமானவர்கள் பங்கேற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
யானை மீது மணமகன்
ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து இருவீட்டார் உறவினர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். மேலும் மணமகனை யானை மீது அமர வைத்து செண்டை மேளம் முழங்க திருமணத்திற்கு வந்தவர்கள் வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த ஆலங்குளம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று, இருவீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக மணமக்களின் தந்தை, உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது ஊரடங்கு தடையை மீறி கூட்டத்தை கூட்டுவது, உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story