மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி போடுவது இன்று முதல் நிறுத்தம்


மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி போடுவது இன்று முதல் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Jun 2021 2:28 AM IST (Updated: 8 Jun 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பூசி போடுவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பூசி போடுவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனாவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஓரளவு குறைந்தது. அதாவது, கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் மாவட்டத்தில் 13 அரசு ஆஸ்பத்திரிகள், 56 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 103 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
தட்டுப்பாடு
இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் குறைக்கப்பட்டன. அதாவது, சேலம் புறநகரில் 2 அரசு ஆஸ்பத்திரிகள், 17 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதார ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 27 மையங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
அந்த மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டன. அதுவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மையங்களுக்கு வந்த பொதுமக்கள் பலர் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
3¾ லட்சம் பேர் போட்டுள்ளனர்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று வரை மாவட்டத்தில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 950 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இன்றுடன் (நேற்றுடன்) போடப்பட்டுள்ளன. ஆகையால் நாளை (இன்று) முதல் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பில்லை. மேலும் கொரோனா தடுப்பூசி வந்தவுடன் உடனடியாக பொதுமக்களுக்கு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Next Story