பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் திறப்பு
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன. ஆட்டோ, டாக்சிகள் ஓடின.
பெரம்பலூர்:
கடைகள் திறப்பு
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மாதம் 17-ந் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மளிகை, காய்கறி, தேங்காய்-பழங்கள் விற்பனை உள்ளிட்ட கடைகள், தள்ளுவண்டி கடைகள், காய்கறி-கனிகள் விற்கும் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் கூடைப்பூ தொழிலாளர்கள் மீண்டும் தங்களது வியாபாரத்தை தொடங்கினர். தங்களது வாழ்க்கை இயல்பு நிலைக்கு வந்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
வாகன போக்குவரத்து அதிகரிப்பு
பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட் தெருவில் கொரோனா முதல் அலை பரவல் காலத்தில் இருந்து தினசரி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மார்க்கெட் தெருவில் தள்ளுவண்டி வியாபாரிகளும், தரைக்கடை வியாபாரிகளும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். நேற்று முதல் தள்ளுவண்டி வியாபாரிகள் மீண்டும் தங்களது விற்பனையை தொடங்கினர்.
இதேபோல் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறைகள் மீண்டும் இயங்கின. இருசக்கர உதிரிபாகங்கள் விற்பனை, மின் சாதனம் மற்றும் இரும்பு சாதன பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், டாக்சிகள் மீண்டும் இயக்கப்பட்டன. இதனால் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. திடீரென்று அதிகரித்த போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
அலுவலகங்கள் இயங்கின
பெரம்பலூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக 20 நாட்களாக மூடப்பட்டிருந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை நகர் மற்றும் ஊரமைப்புத் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலகம், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 30 சதவீத ஊழியர்களுடன் இயங்க தொடங்கின.
கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நீதிமன்றங்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்னும் திறக்கப்படவில்லை. இம்மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டால் 11-ந்தேதிக்கு பிறகு நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்று நீதித்துறையினர் தெரிவித்தனர்.
மங்களமேடு
மங்களமேடு பகுதியில் லப்பைகுடிகாடு, வாலிகண்டபுரம், அகரம்சீகூர் பகுதிகளில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்த பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
குன்னம்
இதேபோல் குன்னம், வேப்பூர், புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை கடைகள், பழக்கடைகள், பூக்கடை, உணவகங்கள் திறந்து இருந்தன. இதேபோல் பலாப்பழ வண்டிகளில் மிகக்குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் ஊரடங்கு தளர்வுகளால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது. காலை 6 மணிக்கு வழக்கத்தைவிட அதிகமான வாகனங்கள் ஓடின. நேரம் செல்லச் செல்ல எண்ணிக்கை அதிகமானது. ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்தி தேவையில்லாமல் பலர் வெளியில் சுற்றி வந்தனர். வெளியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story