குன்னூரில் மாதத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


குன்னூரில் மாதத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2021 1:28 AM GMT (Updated: 8 Jun 2021 1:32 AM GMT)

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை கொடுத்தால் குன்னூரில் மாதத்திற்கு 1 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என நாமக்கல்லில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையால் நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு தொடங்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். 

அதன் அடிப்படையில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை நான் தொடங்கி வைத்து உள்ளேன். இங்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சிகிச்சை அளிக்கும் வகையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கும் சிகிச்சை அளிக்க தனிவார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 938 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் இருந்து இதுவரை 3,840 குப்பி மருந்து மட்டுமே பெறப்பட்டு உள்ளது. ஆனால் தேவை 35 ஆயிரம் குப்பிகளாக உள்ளன. எனவே கருப்பு பூஞ்சைக்கான மருந்து கேட்டு பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. அதில் யாரும் பங்கேற்காத நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதை முதல்-அமைச்சர் முடிவு செய்வார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் முதலில் வெறிநாய் கடிக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. 

இந்த தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தி.மு.க. நிர்வாகிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தபோது, இந்த நிறுவனத்தை மேம்படுத்த ரூ.137 கோடி நிதிபெற்று கொடுத்தனர். அந்த பணிகள் 2019-ம் ஆண்டே முடிவுற்று அந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயார் நிலையில் உள்ளது.
இந்த நிறுவனத்தில் நானும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆய்வு செய்தோம். கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை மத்திய அரசு கொடுத்தால் அங்கு மாதம் ஒன்றுக்கு 1 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். இதற்கு மத்திய அரசு உரிய அனுமதி தர வேண்டும்.

இதேபோல் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தையும் தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ உடனடியாக எடுத்து நடத்தி, கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க, மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என காத்திருக்கிறோம்.

மத்திய அரசு தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ் தர வேண்டும். ஆனால் இதுவரை 5½ லட்சம் டோஸ் மட்டுமே வந்துள்ளன. மீதமுள்ள 36½ லட்சம் தடுப்பூசி ஓரிரு நாட்களில் வரும் என எதிர்பார்க்கிறோம். வந்த உடன் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story