கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை; எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு


கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை; எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2021 3:22 PM IST (Updated: 8 Jun 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

பலத்த மழை எச்சரிக்கை
மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 5-ந் தேதி தொடங்கி சில இடங்களில் பெய்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள மும்பை உள்ளிட்ட நகர பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணி துரித கதியில் நடந்து வருகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மராட்டியத்தில் அடுத்த 5 நாட்களில் மும்பை மண்டலம், கொங்கன் கடலோர பகுதிகள், மத்திய மராட்டிய பகுதிகள், அதாவது மும்பை, தானே, ராய்காட், பால்கர், அகமதுநகர், புனே, பீட், ஜல்னா, பர்பானி, ஹிங்கோலி, நாந்தெட், அவுரங்காபாத் மற்றும் லாத்தூர் ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாநில, மாவட்ட நிர்வாகத்தினரை எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தயாராக இருக்க வேண்டும்
மும்பை பெருநகர மண்டலம் மற்றும் கொங்கன் பிராந்தியத்தில் ஜூன் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று கணித்து உள்ளது.எனவே எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்கவேண்டும்.நீங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதுடன் மக்கள் எந்த ஒரு துயரத்தையும் எதிர்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கொரோனா நோயாளிகள் தங்கள் சிகிச்சைக்கு எந்த இடையூறும் எதிர்கொள்ளக்கூடாது. இதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படவேண்டும்.

பாதுகாப்பான இடங்களுக்கு...
தாழ்வான பகுதிகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவேண்டும்.பொறுப்பு மந்திரிகள் தங்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை கூட்டங்களை கூட்டி நிலைமையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Next Story