கொரோனாவுக்கு ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் பலி; தெற்கு ரெயில்வேயில் இதுவரை 5 பேர் உயிரிழப்பு
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 45). இவர் மயிலாப்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் இவருக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து இவர் கடந்த மாதம் 17-ந்தேதி சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 31-ந்தேதி அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது அவரது நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்துக்கு இறுதி சடங்குக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதுவரை தெற்கு ரெயில்வேயில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் பணியில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story