சாலையோரம் காய்கறி கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்


சாலையோரம் காய்கறி கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
x
தினத்தந்தி 8 Jun 2021 9:59 PM IST (Updated: 8 Jun 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சாலையோரம் காய்கறி கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.


திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த கடைகள் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரத்தில் சிறு வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். மேலும் மொத்த வியாபாரிகள் முருகபவனம் பகுதிக்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே ஊரடங்கால் மார்க்கெட் வெளியே சாலையோரத்தில் காய்கறி கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு பஸ்நிலையம், நாகல்நகர் சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக தளர்வில்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தற்காலிக சந்தைகளும் மூடப்பட்டன.
அனுமதி மறுப்பு 
இதனால் வியாபாரிகள் வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று தெருத்தெருவாக விற்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து காந்தி மார்க்கெட் வெளியே சாலையோரத்தில் கடைகளை அமைத்து காய்கறி விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலையில் சாலையோரத்தில் காய்கறிகள் கடைகளை வியாபாரிகள் அமைத்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் கொரோனா காலமாக இருப்பதால் சாலையோரத்தில் கடைகளை அமைக்க கூடாது என்று போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் வியாபாரிகள் மார்க்கெட் உள்ளே புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளின் முன்பு அமர்ந்து காய்கறிகளை விற்றனர்.
முற்றுகை 
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து, புதிய கடைகளை திறக்கும் முன்பு மார்க்கெட்டுக்குள் காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் திரண்டு சென்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் காய்கறிகளை விற்பனை செய்யும்படி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத வியாபாரிகள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, வியாபாரிகளை சமரசம் செய்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Next Story