மெக்ஐவர் கல்லறையில் கலெக்டர் மலர் வளையம் வைத்து அஞ்சலி
ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் கல்லறையில் கலெக்டர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது, கடந்த 1848-ம் ஆண்டு மெக்ஐவர் என்பவர் ஊட்டியில் பூங்கா அமைப்பதற்கான வேலைகளை தொடங்கினார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து சிரமத்துக்கு மத்தியில் கப்பல்கள் மூலம் அரிய வகை மரக்கன்றுகள், விதைகளை கொண்டு வந்து நடவு செய்தார். 1867-ம் ஆண்டு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. அவர் 19 ஆண்டுகள் அயராமல் உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
தற்போது பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த பூங்காவுக்கு ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் கடந்த 8.6.1876-ந் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
அவரது உடல் ஊட்டி புனித ஸ்டீபன் ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில், மெக்ஐவரின் 145-வது நினைவு நாளையொட்டி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். புனித ஸ்டீபன் ஆலய பங்கு தந்தை அருண் திலகம் பூங்கா உருவாக முக்கிய பங்கு வகித்த மெக்ஐவர் குறித்து விவரித்து சிறப்பு பிரார்த்தனைசெய்தார்.
Related Tags :
Next Story