அடாவடி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்; தேனி கலெக்டர் தகவல்
அடாவடி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என்று தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்று நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் கடன் வழங்கியுள்ள நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் பணியாளர்கள் மூலம் சுயஉதவிக்குழுவினரிடம் கடன் தவணை தொகையை அடாவடியாக வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கடின போக்கினை தனியார் நிதி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். புகார்களுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும்.
அதையும் மீறி ஏதேனும் புகார்கள் எழுந்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்டத்தில் நுண்நிதி நிறுவனங்கள் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை 1800-102-1080 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story