தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், நர்சு உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், நர்சு உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அழகுராஜா (வயது 58). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகுராஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் போடி மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு போலீஸ் மரியாதையுடன் அழகுராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய பசுபதி (56), கடமலைக்குண்டுவை சேர்ந்த 68 வயது முதியவர், பெரியகுளத்தை சேர்ந்த 55 வயது பெண், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர், திண்டுக்கல்லை சேர்ந்த 35 வயது பெண், 37 வயது பெண் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதேபோல் தேனியை சேர்ந்த 73 வயது முதியவர், 65 வயது முதியவர், 64 வயது முதியவர் ஆகிய 3 பேரும் கொரோனா பாதிப்புடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். ஆனால் அவர்களும் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகினர். இதன்மூலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் நேற்று 256 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 589 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 539 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 3 ஆயிரத்து 674 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story