சூளகிரி அருகே டிரைவரை கொலை செய்ய முயன்ற அண்ணன்-தம்பிகள் கைது


சூளகிரி அருகே டிரைவரை கொலை செய்ய முயன்ற அண்ணன்-தம்பிகள் கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 11:12 PM IST (Updated: 8 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே டிரைவரை கொலை செய்ய முயன்றதாக அண்ணன்-தம்பிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள திருமலகனிகோட்டா பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 35). டிரைவர். அதேபகுதியை சேர்ந்தவர் முருகேசன் (33). இவர்கள் உறவினர்கள் ஆவர். கடந்த 6-ந் தேதி இரவு, நரசிம்மன் காமன்தொட்டி பகுதியில் மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது, முருகேசன் அங்கு சென்று அவரிடம் மது கேட்டார். அதற்கு நரசிம்மன் தர மறுத்தார்.

இதையடுத்து அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் முருகேசன், இவரது தம்பிகள் பிரபு (25), மல்லேஷ் (27) ஆகியோர் திருமலகனிகோட்டாவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தனர். அப்போது, அங்கிருந்த நரசிம்மனிடம் அவர்கள் தகராறு செய்தனர். மேலும் தாங்கள் வைத்திருந்த கட்டையால் அவரை தாக்கினர்.

கைது

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த நரசிம்மன் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இதுகுறித்து நரசிம்மனின் மனைவி தனலட்சுமி சூளகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பிகளான முருகேசன், பிரபு, மல்லேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

Next Story