பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் 40 இடங்களில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவராசன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகி மாதையன், நகர செயலாளர் விஜயபாரதி, வட்டார செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணி, கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சுதர்சனன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் வணங்காமுடி, அண்ணாதுரை, சேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
அரூர்-பாலக்கோடு
இண்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், நிர்வாகி மாது உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன், நிர்வாகிகள் நடராஜன், முருகன், ரவீந்திரபாரதி, ராஜு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் மாதேமங்கலம், பாலக்கோடு, பி.அக்ரஹாரம், கம்பைநல்லூர், சின்னம்பள்ளி, ஏரியூர், நல்லம்பள்ளி உள்பட 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி அம்மன் நகர் பகுதியில் வட்டார துணை செயலாளர் குழந்தைவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தாயம்மாள் செல்வம், நிர்வாகிகள் சாம்ராஜ், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் தளவாய்அள்ளி, மாரியம்பட்டி, சோளப்பாடி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார நிர்வாகக்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் காளியப்பன், ராஜகோபால், மாதவராஜ், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கைகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இழப்பீட்டு தொகை உள்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story