தேன்கனிக்கோட்டை, ஓசூரில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய 8 பேர் கைது
தேன்கனிக்கோட்டை, ஓசூரில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்
ஊரடங்கு
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள், மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதேபோல் கர்நாடகாவில் இருந்தும் மதுபாட்டில்கள் கிருஷ்ணகிரி வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாநில எல்லைகளில் மதுவிலக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அஞ்செட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
மதுபாக்கெட்டுகள் கடத்தல்
அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேப்பலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 28), பெருமாள் (29), ராஜ்குமார் (29), சக்திவேல் (21) என்பதும், விற்பனைக்காக கர்நாடகாவில் இருந்து மதுபாக்கெட்டுகளை தர்மபுரிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 384 மதுபாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
2 கார்கள் பறிமுதல்
இதேபோல், தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று மாலை மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,444 மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்கள், மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த பள்ளலப்பள்ளியை சேர்ந்த சதாசிவம் (36), பெரிய கண்ணாளப்பட்டியை சேர்ந்த ரவி (40), கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலேகுளியை சேர்ந்த அரவிந்த் (28), பெங்களூரு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 1,444 மதுபாக்கெட்டுகள், 2 கார்கள், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story