சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை
சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை விற்பனையாளர்களுக்கு கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போடிப்பட்டி
சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை விற்பனையாளர்களுக்கு கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தரமற்ற விதைகள்
மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய காரணியாக விதைகள் உள்ளது. எனவே தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விதைச்சான்றுத்துறை மற்றும் விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும் சில பகுதிகளில் தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அங்கீகாரமற்ற விற்பனையாளர்களிடமிருந்து விவசாயிகள் விதைகளை வாங்கி சாகுபடி மேற்கொள்வதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தரம் குறைவான, கலப்பட விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாச்சலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடும் நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் 161 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களும், நாற்றுப்பண்ணைகளும் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் கடந்த 2 மாதங்களாக உடுமலை விதை ஆய்வாளரால் விதை விற்பனை நிலையங்களில் 185 முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது 111 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு விதை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விதை பரிசோதனைகளின் முடிவில் தரமற்றது என்று முடிவுகள் கிடைக்கப்பெற்றால் சட்டரீதியாகவோ அல்லது துறை ரீதியாகவோ நடவடிக்கை எடுக்கப்படும்.
குறுவை சாகுபடி
தற்போது குறுவை பருவம் தொடங்கியுள்ளதால் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடத்தொடங்குவார்கள். அவ்வாறு நெல் விதைகளை வாங்கும் போது சான்று பெற்ற நெல் விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற விதை விற்பனைக்கடைகளிலோ வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் விதைகளின் முளைப்புத்திறன் அறிந்து விதைகளை வாங்க வேண்டும். அத்துடன் விதை கொள்முதல் செய்யும் ரசீதுகளில் உள்ள விதைகளின் பெயர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி எண் ஆகியவை வாங்கும் விதைகளுடன் ஒத்து இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ரசீதுகளை அடுத்த பருவம் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மேலும் உரிமம் இல்லாத விற்பனையாளர்களிடமிருந்து விதைகளை வாங்குவதை கண்டிப்பாகத்தவிர்க்க வேண்டும். அத்துடன் விதைகளே விவசாயத்துக்கு ஆதாரம் என்பதால் விதை விற்பனையாளர்கள் லாப நோக்கம் மட்டும் கொண்டு செயல்படாமல் விவசாயிகளுக்கு நல்ல சான்று பெற்ற, அதிக முளைப்புத்திறன் கொண்ட, கலப்படமற்ற தரமான விதைகளை மட்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story