விற்பனை செய்ய முடியாததால் கொடிகளிலேயே பறிக்காமல் விடப்பட்ட தர்பூசணிப்பழங்கள்
உடுமலை பகுதியில் விற்பனை செய்ய முடியாததால் கொடிகளிலேயே பறிக்காமல் விடப்பட்ட தர்பூசணிப்பழங்கள் அழுகி வீணாகி வருகிறது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் விற்பனை செய்ய முடியாததால் கொடிகளிலேயே பறிக்காமல் விடப்பட்ட தர்பூசணிப்பழங்கள் அழுகி வீணாகி வருகிறது.
வியாபாரம் பாதிப்பு
உடல் வெப்பத்தைத் தணித்து, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களில் முதலிடம் பிடிப்பது தர்பூசணியாகும். இதனால் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்வார்கள். அந்த மாதங்களில் சாலையோரங்களிலும், காய்கறி மற்றும் பழச் சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த பழங்களின் உட்புறமுள்ள கண்ணைக் கவரும் சிகப்பு வண்ணமும், அதன் இனிப்பு சுவையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்வதால் பொதுமக்கள் இவற்றை விரும்பி வாங்கிச் செல்வர். ஆனால் கடந்த ஆண்டு கோடையில் உச்சம் பெற்ற கொரோனா வைரஸால் தர்பூசணி வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதுபோல இந்த ஆண்டிலும் கொரோனா வைரஸின் 2 ம் அலையால் தர்பூசணி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒருசில விவசாயிகள் தர்பூசணிகளை கொடியிலே பறிக்காமல் விட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
பருவத்துக்கேற்ற பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடுவது என்பது விவசாயத்தில் வெற்றி பெறுவதற்கான ரகசியமாகும்.அந்தவகையில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய் மற்றும் பழங்களுக்குத் தேவை இருக்கும் என்பதை அறிந்து அந்த பயிரை சாகுபடி செய்தால் விற்பனை வாய்ப்புகள் எளிதாவதுடன் நல்ல விலையும் கிடைக்கும்.அதனைக் கருத்தில் கொண்டு தற்போது நிலப் போர்வை அமைத்து தர்பூசணி சாகுபடி மேற்கொண்டோம்.
வருவாய் இழப்பு
தற்போதைய நிலையில் களை எடுத்தல் போன்ற பராமரிப்புப் பணிகளுக்குக் கூலி ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே நிலப் போர்வை அமைத்து சாகுபடி செய்யும் போது களைகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதுடன் தண்ணீர் விரயமும் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு திட்டமிட்டு சாகுபடி மேற்கொண்டதால் நல்ல விளைச்சலும் இருந்தது. சுமார் 120 நாட்களில் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று திட்டமிட்ட நிலையில் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாற்றி விட்டது.
இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதாலும் உள்ளூர் வியாபாரிகளால் பெரிய அளவில் விற்பனை செய்ய முடியவில்லை. வேறு வழியில்லாத நிலையில் ஒருசில அறுவடைகளுக்குப் பிறகு கொடிகளைப் பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டோம். இதனால் சற்று விளைந்த காய்கள் கொடிகளிலேயே பழுத்துக் கிடந்தன. அவற்றை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இலவசமாக எடுத்துச் சென்றனர்.
அழுகி வீணாகியது
மேலும் பெருமளவு காய்கள் கொடிகளிலேயே அழுகி வீணாகி விட்டது. தற்போது அவ்வப்போது மாடுகள் வந்து மேய்ந்து செல்கின்றன. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எப்போது நிலைமை சீராகும் என்று தெரியாத நிலையில் அடுத்து என்ன சாகுபடி செய்வது என்பதில் குழப்பமும் தயக்கமும் இருக்கிறது. தர்பூசணி சாகுபடியால் பெருமளவு முதலீடு இழப்பு என்று சொல்ல முடியா விட்டாலும் வருவாய் இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்'.
இவ்வாறு விவசாயி கூறினார்.
Related Tags :
Next Story