குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கருப்பு கொடியுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கருப்பு கொடியுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Jun 2021 11:57 PM IST (Updated: 8 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கருப்பு கொடியுடன் திருத்தலையூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முசிறி, 
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கருப்பு கொடியுடன் திருத்தலையூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

முசிறி ஊராட்சி ஒன்றியம் திருத்தலையூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் அதிருப்தி அடைந்த திருத்தலையூர் கிராம மக்கள் கையில் கருப்பு கொடி மற்றும் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்துக்கு நேற்றுகாலை திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

குடிநீர் பிரச்சினை

அப்போது திருத்தலையூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை சரி செய்யவேண்டும். தெருவிளக்கு வசதி, கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்து தரவேண்டும். குடிநீர் பிரச்சினை குறித்து கேட்க சென்ற இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை திரும்பபெற வேண்டும். திருத்தலையூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த முசிறி ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் ராஜ்மோகன், ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன், கிராம நிர்வாக அதிகாரி அழகேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறியதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Next Story